சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இந்நூலகமானது நுணாவில் மேற்கு, கண்டி வீதியில் அமைந்துள்ளது. நூலகம் தற்போது விஸ்தரிக்கப்பட்ட சேவையை ஆற்றுவதால் பலதரப்பட்ட மக்கள் பயன்பெற வாய்ப்பாக உள்ளது. சாவகச்சேரி பொதுநூலகத்திற்கு சென்று பயன்பெறுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக மக்களின் வேண்டுகோளின் பேரில் 1989ம் ஆண்டு இது ஒரு கிளை நூலகமாக தென்னிந்திய திருச்சபைக்கு முன்பாகவுள்ள தனியார் ஒருவரின் வீட்டில் இயங்கி வந்தது. ஆரம்பத்தில் குறுகிய இடப்பரப்பில் இக்கிளை நூலகமானது குறைந்த அங்கத்தவர்களை கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட சேவையையே ஆற்றிவந்தது.


அதாவது குறிப்பிட்ட வாசகர்களுக்கு நூல்களை இரவல் வழங்கி சேவை செய்தது. நாளடைவில் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இந் நிலையில் அது தனக்குரிய கட்டடத்தினை உருவாக்க வேண்டிய அவசிய சூழல் ஏற்பட்டது. இதன் போது இவ் ஊரைச் சேர்ந்த திரு.காசிப்பிள்ளை சதாசிவம் அவர்கள் தனது காணியை நன்கொடையாக வழங்கி உதவினார். நகராட்சி மன்றம் அக் காணிக்குள் ஒரு வசதியான நூலகத்தை அமைப்பதற்குரிய அனைத்து திட்டங்களையும் வகுத்து ஒரு மாடிக் கட்டிடத்தை அமைக்க முன்வந்தனர். நாட்டில் காணப்பட்ட யுத்த சூழல் நிலைமையானது துரிதப்படுத்தி உரியவாறு அமைக்க தடையாக அமைந்தது. மீண்டும் 1998இல் கட்டிட வேலைகள் தொடங்கி முதலில் போட்ட திட்டத்தின்படி அமையாமல் தனிக் கட்டிடமாகவே இறுதியில் பூர்த்தியாகியது. இக்கட்டிடம் ஆரம்பத்தில் இருந்த இடத்திற்கு 0.5Km தூரத்திலே அமைந்துள்ளது. இந் நூலகம் படிப்படியாக வளர்ச்சி கண்டு 2011 ஆம் ஆண்டில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இரண்டு மாடிகளைக் கொண்டதொரு அழகிய கட்டடமாக உருப்பெற்று காட்சியளிக்கின்றது.