சாவகச்சேரி பொது நூலகமானது இலங்கையின் வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி என்னும் நகரத்தில் அமைந்துள்ள பிரதானமான நூலகமாக விளங்குகின்றது. இது 1962 ம் ஆண்டு சாவகச்சேரி நகரசபையினால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இந்த நூலகத்தில் எல்லா வகையான நூல்களும் காணப்பட்டன. அத்துடன் சாவகச்சேரி நகரம் பற்றிய அரிய நூல்களையும் கொண்டிருந்தது. 1996 ம் ஆண்டு நாட்டின் வடபகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் போது ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக நூல்கள் அனைத்தும் முற்றாக அழிவடைந்தும் களவாடப்பட்டும் காணப்பட்டது.
தற்போது இந்நிலை முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்டு இந்நூலகமானது 13820 தமிழ், சிங்கள, ஆங்கில மொழி நூல்களை கொண்டுள்ளது. 12 வயதிற்கு மேற்பட்ட 1469 அங்கத்தவர்களையும் இவற்றில் இயங்கு நிலை அங்கத்தவர்கள் 369 பேரும், 12 வயதிற்கு உட்பட்ட 236 சிறுவர் அங்கத்தவர்களையும் இவற்றில் இயங்கு நிலை அங்கத்தவர்கள் 33 பேரையும் கொண்டு இயங்கிவருகின்றது. மேலும் இந்நூலகமானது வளர்ந்தவர்களுக்கான நூல் இரவல் வழங்கும் பகுதி, சிறுவர்களுக்கான நூல் இரவல் வழங்கும் சிறுவர் பகுதி, பத்திரிகைப் பகுதி, உசாத்துணைப் பகுதி, இலவச இணைய சேவைப் பகுதி என்பவற்றைக் கொண்டு இயங்கிவருகின்றது. தற்போது இந்நூலகமானது இலங்கை தேசிய நூலகத்தின் அனுசரணையுடன் நூலக தன்னியமயமாக்கல் நடைமுறைக்கு தன்னை மாற்றியமைப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
நூலகம் திறக்கும் நாட்கள் திங்கள் - ஞாயிறு (பொது விடுமுறை தினங்கள் உட்பட) நேரம் காலை 8.00 மணி தொடக்கம் மலை 5.00 மணி வரை ஆகும்.
அங்கத்துவ நடைமுறை
12 வயதிற்கு உட்பட்டோர் சிறுவர் அங்கத்தவர்களாக இருக்க முடியும்.
12 வயதிற்கு மேற்பட்டோர் வளர்ந்தவர்களுக்கான அங்கத்தவர்களாக இருக்கின்றனர். சிறுவர்களுக்கான ஒரு வருட அங்கத்துவக்கட்டணம் ரூபா 100.00 ம் வருடாந்த புதுப்பித்தல் கட்டணமும் ரூபா 100.00ம் ஆகும். வளர்ந்தவர்களுக்கான ஒருவருட அங்கத்துவ கட்டணம் ரூபா 200.00 ம் வருடாந்த புதுப்பித்தல் கட்டணமும் ரூபா 200.00ம் ஆகும். நூலக அங்கத்தவராக எவரும் இணைந்துகொள்ள முடியும் அங்கத்தவருக்காக பிணை நிற்பவர் சாவகச்சேரி நகரசபைக்குள் வசிப்பவராகவும், நகரசபைக்கு வரி செலுத்துபவராகவும் இருத்தல் வேண்டும்.